T20 உலகக் கிண்ணத் தொடக்கம் இலங்கை அணியின் உற்சாகமான வெற்றி
ஐ.சி.சி. 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் துவக்கப் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நேற்றைய தின போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைச் சேர்த்தது.இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அவருக்கு துணையாக கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களைச் சேர்த்து அணியின் மொத்தத்தை உயர்த்தினார்.164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அயர்லாந்து அணிக்காக ஹரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண மற்றும் வனிந்து ஹசரங்க தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.