புறக்கணிப்பு முடிவை மீளப்பெற்ற பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் முக்கிய திருப்பம்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டு விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவை மீளப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்த பங்களாதேஷ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டோம் என பாகிஸ்தான் அரசு ஆரம்பத்தில் தீர்மானித்திருந்தது. இதனால், இந்தியா பாகிஸ்தான் மோதல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.இந்நிலையில், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உறுப்புநாடுகளின் கோரிக்கைகளையும், பல்தரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவுகளையும் தொடர்ந்து, பாகிஸ்தான் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.பாகிஸ்தான் இந்தப் போட்டியில் விளையாடத் தவறியிருந்தால், அந்த அணிக்கு இரண்டு முக்கிய புள்ளிகள் இழந்திருக்க நேர்ந்திருக்கும். அதேவேளை, கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்தியா பாகிஸ்தான் மோதல் நடைபெறாமல் போயிருப்பதுடன், தொடருக்கும் வருமானத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.பாகிஸ்தானின் இந்தத் தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில்,
விளையாட்டு தொடர்வதை உறுதி செய்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு நன்றிகள். கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. 1996 உலகக் கிண்ணத்தின் போது பாதுகாப்பு காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு வர மறுத்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை மறக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய அணி திட்டமிட்டபடி கொழும்புக்கு வருவதாக தெரிவித்திருந்தார். தற்போது ரி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, தனது உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் இலக்குடன் இந்தத் தொடரில் களமிறங்குகிறது.இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகள் அண்மைய காலங்களில் பதற்றமடைந்திருந்தாலும், உலகக் கிண்ணத் தொடருக்காக நடுநிலை நாடான இலங்கையில் விளையாட மூன்று அணிகளுக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.