டக்வத் லூயிஸ் முறையில் இலங்கையை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் இவ் விளையாட்டானது பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இவ் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. மாலை 6.30 மணிக்கு நாணயச் சுழற்சி நடத்தப்படவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தாமதமடைந்ததுடன், பின்னர் 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹெற்றிக் சாதனையை நிகழ்த்தினார். அதேவேளை, அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
134 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலடி வழங்கிய இங்கிலாந்து அணி, 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்திருந்த போது, மீண்டும் மழை போட்டியைத் தடை செய்தது. இதனையடுத்து, டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பில் சால்ட் 46 ஓட்டங்களையும், டாம் பான்டன் 29 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில், இங்கிலாந்து அணி தற்போது 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.