பிரதேச செயலகம் முன் திரண்ட எதிர்ப்பு அலை
வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக, மக்கள் எழுச்சியுடன் கூடிய எதிர்ப்பு போராட்டம் இன்று நெடுங்கேணி பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அகிம்சை முறைப் போராட்டம், காலை 10.30 மணியளவில் நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமானது. இதில் பங்கேற்ற பொதுமக்கள், கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு, திட்டத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் பங்கேற்றோர், நெடுங்கேணி பேருந்து நிலையத்திலிருந்து நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்று, அங்கு ஒன்றுகூடி அகிம்சை முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது, கிவுள் ஓயா திட்டம் தொடர்பான எதிர்ப்புகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று, நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், அது ஜனாதிபதிக்கு அனுப்பப்படுவதற்காக வழங்கப்பட்டது.இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் மேலும் இந்த தமிழ் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க. துளசி, மு. சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மேலாக, பாராளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், சி. சிறிதரன், து. ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.