வெனிசுலா பாதுகாப்பு நிலைமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவனம்
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக நேற்று உரையாடல் நடத்தியுள்ளார் என அமைச்சர் விஜித ஹேரத் தனது x சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இரு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது என குறிப்பிடவில்லை. இவ் உரையாடலானது வெனிசுலாவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக சர்வதேச கவனம் அதிகரித்துள்ள பின்னணியில், இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்தப் பின்னணியில், வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, கடந்த ஜனவரி 05ஆம் திகதி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அந்த அறிக்கையில், வெனிசுலாவின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய பலத்தைப் பிரயோகிப்பதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச பிணக்குகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளல் மற்றும் நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியிருந்தது.