கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோக சேவை தற்காலிகமாக நிறுத்தம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலின்படி, கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக வழமையான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வர தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமைப்பு முழுமையாக சீரமைக்கப்பட்டதும், கடவுச்சீட்டு சேவைகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.சேவை மீளத் தொடங்கும் வரை பொதுமக்கள் பொறுமையாக ஒத்துழைக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.