அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் நவீன ஐ.டி. ஆய்வுகூடம் திறப்பு
அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலய மாணவர்களின் டிஜிட்டல் கல்வித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், நவீன வசதிகள் கொண்ட புதிய தகவல் தொழில்நுட்ப (ICT) ஆய்வுகூடம் ஒன்று நேற்றய தினம்(06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.சுமார் ரூபாய் 60 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இவ்வாய்வுகூடம், மாணவர்களுக்கு செயன்முறை அடிப்படையிலான கற்றலை வழங்கும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரூ. 56 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான உயர்தர வர்த்தகநாமங்களைக் கொண்ட 21 கணனிகளும், ரூ. 2 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான 75 அங்குல ஊடாடல் அம்சம் கொண்ட ஸ்மார்ட் திரையும் (AI Cam Embedded Smart Board) வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் பிரதான அனுசரணையாளராக, இப்பாடசாலையின் பழைய மாணவரும் Technocity (PVT) LTD நிறுவனத்தின் தலைவருமான ஃபமி இஸ்மாயில் செயற்பட்டார். அவர் இந்த நவீன உபகரணங்களை வழங்கியதுடன், திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கொழும்பு மாவட்ட உலமா சபையின் பிரதித் தலைவரும், தெஹிவளை நூறுல் குர்ஆன் மத்ரஸாவின் அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஃபாயிஸ் ரஷாதி விசேட விருந்தினராக நிகழ்வில் பங்கேற்றார்.
நேற்று காலை நிலவிய கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பாடசாலை அதிபர் I. L. சாஜித் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா உற்சாகமாகவும் கோலாகலமாகவும் இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் M. M. கெளதர் முஸ்தபா மற்றும் பொருளாளர் M. I. நாஸர் ஆகியோர் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முக்கிய பங்காற்றியிருந்தமை நினைவுகூரப்பட்டது.
தமது ஆரம்பக் கல்வியை பெற்ற பாடசாலைக்கு இவ்வாறு ஒரு டிஜிட்டல் கல்வி வாய்ப்பை உருவாக்கி வழங்கியமை பெருமையும் மகிழ்ச்சியையும் தருவதாக நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கருத்துத் தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.