நாட்டின் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியுடன் மீளாய்வு ஒத்திவைப்பு
தித்வா சூறாவளி காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பட்டுள்ள இலக்குகளில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சூறாவளி அனர்த்தம் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை முழுமையாக மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில், நாட்டில் நிலவும் யதார்த்த நிலைமைகள் எப்போதும் கவனத்தில் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். எதிர்காலம் தொடர்பான கணிப்புகளின் அடிப்படையிலேயே கொள்கைகளும் இலக்குகளும் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் போது இலக்குகளும் மாற்றம் அடைய வேண்டியது தவிர்க்க முடியாதது. இது இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை கோட்பாடாகும்,என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஐந்தாவது மீளாய்வை கடந்த டிசம்பர் 15ஆம் திகதியளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும், எனினும் சூறாவளி காரணமாக அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் செலவினங்கள் அவசியம் என அரசாங்கம் முன்வைத்துள்ளதால், இந்த மீளாய்வை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை உருவானதாகவும் அவர் விளக்கினார்.இந்த நிலையில், முழுமையான மதிப்பீட்டை மேற்கொண்டு அதன் பின்னரே அடுத்த ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனத் தெரிவித்த ஆளுநர், அதற்காக கூடுதல் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற Rapid Financing Instrument (RFI) வசதியைப் பெறுவது சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறினார்.மேலும் 2020ஆம் ஆண்டு கொவிட்-19 காலத்தில் கடன் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால் இந்த வசதியைப் பெற முடியவில்லை என்றும், தற்போது கடன் நிலைத்தன்மை மீண்டும் எட்டப்பட்டுள்ளதால், ஏனைய புதிய உடன்படிக்கைகள் இன்றி, இரண்டு வாரங்களுக்குள் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய கையிருப்பு 8 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையை எட்ட வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.