தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் விழுந்து பயங்கர விபத்து-22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பாரம்தூக்கி (கிரேன்) ஒன்று பயணிகள் ரயில் மீது சரிந்து விழுந்ததில், நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ரட்சசிமாவில் உள்ள சிகியோ மாவட்டத்தில், இன்று (14) காலை 9.05 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேங்கொக்கில் இருந்து உபோன் ரட்சதானி நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது, அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வந்த இராட்சத கிரேன் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும்.சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.மேலும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து, மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேன் மிகுந்த வேகத்தில் ரயில்மீது விழுந்ததனால், ரயில் தடம் புரண்டதுடன் பல பெட்டிகள் நசுங்கி தீப்பிடித்தன. இதனால் பல பயணிகள் பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தி, இடிபாடுகளை வெட்டி அகற்றி பயணிகளை மீட்கும் கடின பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சீனாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின்போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானத் தளத்திலிருந்து கிரேன் சரிந்து, கீழே வேகமாக சென்றுகொண்டிருந்த ரயில்மீது விழுந்துள்ளது.தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.