இலங்கையின் புகழ்பெற்ற புலனாய்வு ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
இலங்கையின் ஊடக உலகில் இன்று பெரும் அதிர்ச்சி,உலகளவில் புகழ்பெற்ற புலனாய்வு செய்தியாளர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் 81 வயதில் காலமானார். இவர் சிறிது கால நோய்வாய்ப்பட்டு காணப்பட்டார். இவர், ‘The Sunday Times’ பத்திரிகையின் பாதுகாப்பு பிரிவுக்கான ஆசிரியராகவும், தனது பிரபலமான ‘Situation Report’ பத்தியின் மூலம் உலகளவில் அறியப்பட்டவர்.
இவரின் வாழ்க்கை மற்றும் பணிகள்
பாதுகாப்பு ஆய்வாளர்,இக்பால் அத்தாஸ் The Sunday டைம்ஸ் பத்திரிகையில் பாதுகாப்பு பிரிவுக்கான ஆசிரியராக பணியாற்றி, அதன் Situation Report எனும் பத்தியின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார்.மேலும் அவர் மேற்கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான ஊடக பணிக்கு, சர்வதேச ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வழங்கும் சர்வதேச ஊடக சுதந்திர விருது உள்ளிட்ட பல கௌரவங்கள் வழங்கப்பட்டன. இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கொள்வனவுகள் மற்றும் ஊழல்கள் குறித்த அவரது கட்டுரைகள் உலகளவில் கவனத்தை பெற்றன. இதனால் அவர் பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் உண்மையை வெளிப்படுத்த துணிந்தார்.
அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை, ஹில் வீதியின், சிறிவர்தன வீதியில் 11 C/1 என்ற இல்லத்தில் வைக்கப்படும். இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்பால் அத்தாஸ், இலங்கையின் ஊடக உலகிற்கு ஒரு முன்னோடி, பாதுகாப்பு ஆய்விலும் புலனாய்விலும் மாறாத நீதி உணர்வை எடுத்துச் சென்றவர். அவரது பணி மற்றும் துணிச்சலான ஆய்வுகள் இன்னும் பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் ஈடுசெய்ய முடியாதது எனப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தமது அனுதாபச் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.