நிந்தவூர் அபிவிருத்திக்காக 32 புதிய திட்டங்கள்
நிந்தவூர் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு, குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையிலிருந்தார். நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லதீப் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நிந்தவூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு 32 முக்கிய அபிவிருத்தி முன்மொழிவுகளை முன்வைத்தார். இம்முன்மொழிவுகள் கல்வி, அடிப்படை வசதிகள், வீதி மற்றும் வடிகால் மேம்பாடு, மின்சாரம், விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு வசதிகள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருந்தன.மேலும் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களும் தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமா லெவ்வை, எம்.எஸ். அப்துல் வாசித், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.