தேசிய நீர் வழங்கல் சபை மேலதிக பொது முகாமையாளர் இலஞ்ச விசாரணையில் கைது
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.சபையின் தலைவரின் பயன்பாட்டிற்காக ஏற்கனவே இரண்டு அரச வாகனங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், கண்டி வடக்கு பாததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் எனும் அரசுத் திட்டத்தின் ஒப்பந்த நிதியை பயன்படுத்தி, டொயோட்டா பிராடோ வகை SUV ஜீப் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைகளில், குறித்த வாகனம் எந்த அதிகாரப்பூர்வ தேவைக்காக பயன்படுத்தப்பட்டது என்பதனை உறுதி செய்யாமலே, வாடகை கட்டணமாக சுமார் 12.75 மில்லியன் ரூபாய் (ஒரு கோடியே 27 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) தொகையை ஜி.என். ஒட்டோ ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு செலுத்தியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மேலும், அந்த நிறுவனத்திடம் இருந்து வாகனத்தை பெற்றுக்கொள்வதற்காக, அரசின் பெறுகை விதிமுறைகளை மீறி செயல்பட்டு, ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.வாகனத்தை முறையாக பொறுப்பேற்காத நிலையிலேயே அதற்கான கட்டணத்தை செலுத்தி, விநியோகஸ்தருக்கு தகாத முறையில் இலாபம் ஈட்டிக்கொடுத்துள்ளதாகவும், இதன் மூலம் ஊழல் மற்றும் ஊழலுக்குச் சதி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்தச் செயல்பாடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.