நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதாரத் துறையின் தீவிர அவதானம்
உலகின் சில நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் தொடர்பாக இலங்கையின் சுகாதாரத் துறையினர் அதிக கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் பரவி வருவதாக கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்தியாவில் நிபா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவானதும் உடனடியாக சுகாதார அமைச்சு இது தொடர்பான அவதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.மேலும், நிபா வைரஸ் என்பது கடந்த காலத்தில் பரவிய கொவிட்-19 தொற்றைப் போன்றதல்ல என்றும், இது மிகவும் ஆபத்தான வைரஸ் வகையாகும் என்றும் அவர் எச்சரித்தார்.கடந்த நான்கு நாட்களில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 277,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சுகாதாரத் துறையினர் அதிகபட்ச எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் ஆகும். வைரஸ் தொற்றிய உணவு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ இது பரவக்கூடும். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) நிபா வைரஸை எதிர்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடிய அதிக ஆபத்து கொண்ட முன்னுரிமை நோய்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.