உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மியன்மார் அரசாங்கத்தின் பங்களிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இந்த அரிசி உதவி நேற்று (09) வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான உதவி, இலங்கை கடற்படையினால் தேவையான சுங்க நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர், இலங்கைக்கான மியன்மார் மேன்மாற தூதுவர் மார்லர் தன் ஹ்டைக் (Marlar Than Htaik) அவர்களினால் வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.டிட்வா சூறாவளியின் தாக்கம் காரணமாக நாட்டின் சுமார் 20 சதவீத விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகளுக்கு மேலதிகமாக, மியன்மார் அரசாங்கம் இந்த அரிசி அன்பளிப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த உதவி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.