கொழும்பில் விசேட தேவையுடையோருக்கான நவீன A/C பஸ் சேவை
கொழும்பு நகரில் விசேட தேவையுடையோர் உட்பட அனைத்து மக்களும் இலகுவாகப் பயணிக்கக்கூடிய வகையில், தாழ்வான மிதிபலகை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட (A/C) 10 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பஸ்கள் 2026 மார்ச் 15ஆம் திகதிக்குள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், அவை லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட் (தனியார்) நிறுவனத்திடம் குறித்த 10 பஸ்களையும் ஒப்படைத்து, அவற்றின் சேவை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பஸ் சேவைகளின் இயக்கம், பராமரிப்பு, அதற்குத் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு போதிய திறன் இல்லையென கண்டறியப்பட்டதன் காரணமாக, குறித்த பொறுப்புகள் லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய பஸ் சேவை, கொழும்பு நகரில் நகரப் போக்குவரத்தை மேலும் நவீனமாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.