பொலிஸ் உத்தரவை மீறி தப்ப முயன்ற வேன் துப்பாக்கிச் சூட்டில் சாரதி பலி
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.அதன்படி, இன்று அதிகாலை அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். இருப்பினும், பொலிஸாரின் உத்தரவைக் கடைப்பிடிக்காமல், குறித்த வேன் மண்டைதீவு பகுதி நோக்கி வேகமாகப் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வீதித் தடையை கண்காணித்து வந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஜீப் வண்டி, சந்தேகத்திற்கிடமான வேனை வழிமறித்து நிறுத்த முயற்சி செய்தபோதும், வேன் நிறுத்தப்படாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.
இந்த நிலையில், வேனை நிறுத்தும் நோக்கில் முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வேனை இலக்காகக் கொண்டு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த வேனின் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அல்பினோ அருள் பயாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.