கல்வி வழியாக மாற்றத்தை உருவாக்க வேண்டும்-பிரதமர் ஹரிணி
நாம் எதிர்பார்க்கும் சமூக மற்றும் தேசிய மாற்றங்கள் வெளியில் இருந்து அல்ல, ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.14ஆவது மகாத்மா காந்தி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். இந்த நிகழ்வின் போது, 2020 மற்றும் 2021 கல்வியாண்டுகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், மாற்றம் ஒன்றை நாம் விரும்புகிறோம் என்றால், அதற்கு முதலில் நாம் தம்மையே மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நாம் மாறும்போதுதான், நம்மால் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், அந்த மாற்றத்திற்குத் தலைமையேற்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதனை முதலில் தம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நீங்கள் உருவாக்க விரும்பும் நாடு எத்தகையது? வாழ விரும்பும் சமூகத்தின் தன்மை என்ன? அந்த மாற்றத்திற்கான பண்புகள் உங்களுக்குள் இருக்கிறதா? என சிந்திக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார்.
தனிநபர்கள் மாற்றத்திற்காக முன்நிற்பதன் மூலமே சமூகம், நாடு மற்றும் உலகம் மாற்றமடைய முடியும் என்றும், தற்போது கல்வி முறை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒரு பரிணாம மாற்றத்தைக் நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கும் காலப்பகுதி இதுவெனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது உரையில் சுட்டிக்காட்டினார்.