பேருவளையில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
பேருவளை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளரைப் போன்று மாறுவேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழு, நேற்று(08) குறித்த இடத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.சுற்றிவளைப்பின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாராக இருந்த தருணத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் அரச வைத்திய அதிகாரி எனவும், ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் முதல் அதற்கு மேற்பட்ட தொகை வரை வசூலித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியரின் உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்று, பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முனைந்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.