சித்தி பெற்றவர்களை புறக்கணிக்கும் அரசு சஜித் பிரேமதாச கடும் விமர்சன

கல்வித் துறையில் நாளுக்கு நாள் உருவாகி வரும் நெருக்கடியான சூழ்நிலை, நாட்டின் மனிதவள மேலாண்மையை பெரும் சவாலுக்கு உள்ளாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.கல்வித் துறையின் மனிதவள முகாமைத்துவம் தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல், துறைசார் பணியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் போன்று, தற்போது அதிபர் சேவை தொடர்பிலும் அதே நிலைப்பாட்டையே அரசு பின்பற்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் அதிபர் சேவையின் 3ஆம் தரத்திற்கான போட்டிப் பரீட்சை 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாகவும், அதன் முதல் கட்டத்தில் 1858 பேரும், இரண்டாம் கட்டத்தில் 4800 பேரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இருப்பினும், அதே பரீட்சையில் சித்தி பெற்ற மேலும் 1216 பேர் இதுவரை நியமனம் பெறாமல் காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஏற்கனவே தகுதி பெற்றவர்களை இணைத்துக் கொள்ளாமல், புதிய போட்டிப் பரீட்சையை நடத்த அரசாங்கம் முனைந்திருப்பது நியாயமற்றதும் மனிதவள மேலாண்மைக்கு எதிரானதுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.மேலும் 3ஆம் தர அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று இன்னும் சேவையில் இணைக்கப்படாதவர்களை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் தெளிவான திட்டமின்மை காரணமாக, கல்வித் துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்றும் அவர் கூறினார். கல்வி அமைச்சர் முதல் உயர் அதிகாரிகள் வரை கல்வியை சரியான முறையில் முன்னெடுக்க தவறியதால், கல்விச் சீர்திருத்தங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும், பிரதமரும் ஜனாதிபதியும் கல்வி தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும், இதனால் கல்வித் துறையில் மாணவர்களும் மனிதவளங்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கல்வித் துறையில் மேலும் குழப்பங்களை உருவாக்காமல், அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் ஏற்கனவே சித்தி பெற்ற அனைவரையும் உடனடியாக சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660