சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம்
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் இதுவரை 4,000க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் மொத்தமாக 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ் வழக்குகளில் 1,683 வழக்குகள் கடந்த ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகள், பாலியல் நோக்கங்களுக்காக சிறுவர்களை வாடகைக்கு எடுப்பது அல்லது பணியில் அமர்த்துவது, உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தரவுகள், நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் இன்னும் தீவிரமாக உள்ளன என்பதைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.