பந்துல பிரசன்ன மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு முயற்சி
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பொலிஸார் தெரிவிப்பதன்படி, இந்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதுடன், குறி தவறிய காரணத்தால் தாக்குதல் வெற்றியடையவில்லை. குறித்த துப்பாக்கிச் சூடு களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.இந்த வேட்பாளர் மீது இதற்கு முன்னரும், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல் வகை துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு உயிருள்ள தோட்டா மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகின்றது.