மன்னார் புத்தளம் வீதி விவகாரம் அரசியல் இரட்டை நிலைப்பாடுகள் வெளிச்சம்
புத்தளம் மன்னார் பிரதான வீதி தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் கடும் சூடுபிடித்துள்ளது. அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியூதீன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோருக்கிடையில் தொடர்ச்சியான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அவை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய முறையில் குரல் கொடுக்கத் தவறிய சில முஸ்லிம் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, அரசைக் கேள்வி கேட்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே, அதே சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் களமிறங்குவது ஒரு திட்டமிட்ட அரசியல் நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வாறான செயல்பாடுகள், மேலும் இது முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல, மூவின மக்களுக்குமானது என்ற தோற்றத்தை சமூகத்தில் உருவாக்கி, அந்த விவகாரம் மெதுவாக அடங்கிவிடும் நிலையை ஏற்படுத்துகிறது. இதனால், உண்மையில் தீர்வு காணப்பட வேண்டிய சமூகப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றன.
மன்னார் புத்தளம் வீதியை திறப்பது இன்று எவ்வளவு கடினமானதாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அந்தப் பாதையை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியூதீனின் அரசியல் ஆளுமை சாதாரணமானதாகக் கருத முடியாது.100 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுடைய இந்த வீதி திட்டம் பல பில்லியன் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் அரசிடம் போதிய நிதி வசதி இல்லாத நிலையிலும், மக்களின் தேவையை முன்னிறுத்தி நிதி ஏற்பாடுகளைச் செய்து இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.இந்த வீதி திறக்கப்பட்டதன் மூலம் பயண தூரம் சுமார் 100 கிலோமீட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு–மேற்கு மாகாணங்களுக்கிடையிலான பொருளாதார, சமூக தொடர்புகள் வலுப்பெற்றுள்ளன. இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் எட்டாக்கனியாக மாறியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், இது இனவாத எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டமாகும். இனவாத அரசியல் வலுவாக இருந்த காலத்திலும், அதனை மீறி இந்த வீதியை அமைத்தது, அ.இ.ம.கா தலைவரின் அரசியல் தைரியத்தையும் நிர்வாக திறனையும் வெளிப்படுத்துகிறது.இன்று, இனவாதத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியுடன் உருவாக்கப்பட்ட அரசின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களே இந்த வீதியை மூட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.
மக்களுக்காக தான் முன்னின்று செய்து முடித்த ஒரு அபிவிருத்தியை மக்கள் அனுபவிக்க முடியாமல் போகிறார்களே என்ற ஆதங்கத்துடனேயே ரிஷாட் பதியூதீன் குரல் கொடுக்கிறார். இந்தக் கவலை ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் இயல்பான கவலையாகும். பலரிடம் காணப்படாத இந்த உணர்வே அவரை தனித்துவமாக்குகிறது.அன்று அமைச்சராக இருந்த காலத்தில் இந்தப் பாதையை அமைத்து முடித்தவர், இன்று அது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. இன்று இல்லையெனினும், ஒருநாள் இந்த வீதி இனவாதத்தை வென்று திறக்கப்படும். அன்றைய தினம், இந்த அபிவிருத்தி அ.இ.ம.கா தலைவரின் பெயருடன் வரலாற்றில் நிலைத்திருக்கும்.