சிவில் உடையில் துப்பாக்கியுடன் வெளியான காட்சிகள் விசாரணை தீவிரம்
கொழும்பு மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர், சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டரும், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் 6ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர், இதற்கு முன்னர் சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்தவர் எனவும், சமீப காலத்தில் அவர் இரத்தினபுரி பொலிஸுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக, இந்த இரு அதிகாரிகளும் மான் வேட்டையுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வந்துள்ளன. குறிப்பாக, சிவில் உடையில் துப்பாக்கி ஏந்தியிருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக நேற்றய முன் தினம் அவர்கள் இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர். மேலும் அதனைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்குச் சொந்தமானதாக கூறப்படும் கஞ்சா தோட்டம் தொடர்பான சோதனை நடைபெற்ற வேளையில், குறித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.