5 நிமிட தாமதம் காரணமாக ஏற்பட்ட வன்முறை பேருந்து பயணிகள் அச்சம்
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே பாதையில் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று (07) முற்பகல் பதிவாகியுள்ளது. ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவின் தரைக்கால முகாமையாளரின் தகவலின்படி, குறித்த இ.போ.ச பேருந்து காலை 6.30 மணியளவில் டயகமவில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து ஹட்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அச்சமயத்தில் பின்னால் வந்த தனியார் பேருந்து குறித்த பேருந்தைத் துரத்தி வந்து, லிந்துலை மெராயா நகருக்கு அருகாமையில் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனியார் பேருந்தின் சாரதி இ.போ.ச பேருந்தின் சாரதி ஆசனத்திற்கான கதவைத் திறந்து தாக்குதல் நடத்தியதாகவும், அந்தத் தாக்குதலில் நடத்துனரும் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், இ.போ.ச பேருந்து ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாகக் கூறப்படும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில், பேருந்தினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட பல பயணிகள் இருந்ததால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகள், பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாகவும் ஹட்டன் டிப்போ தரைக்கால முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.