சட்டவிரோதமான 436 அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது
சட்டத்திற்கு முரணான முறையில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன், இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, பல்லுயிர் கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவு, மேலும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்த திடீர் சோதனை மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணாகவும், மற்றையவர் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் போது, இவர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 436 அந்தூரியம் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த செடிகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான விவசாய திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அனுமதிப்பத்திரம் இவர்களிடம் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிகளை மீறி இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்