பயணிகள் வருகையில் வரலாற்றுச் சாதனை பெற்ற மத்தல விமான நிலையம்
2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரை இல்லாத அளவிலான விமானப் பயணிகள் போக்குவரத்தை கையாள்ந்துள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர், ஒரே ஆண்டில் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் மத்தல விமான நிலையம் ஊடாக 1 இலட்சத்து 40 ஆயிரத்து 614 பயணிகள் பயணித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே காலப்பகுதியில், மொத்தம் 703 சர்வதேச விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளதாகவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தல விமான நிலையத்தில் பயணிகள் வருகை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வளர்ச்சிக்குப் பிரதான காரணமாக, புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மத்தல விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீது செலுத்தப்பட்ட விசேட கவனம் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னர் வனவிலங்கு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை ஆரம்பிக்க தயக்கம் காட்டியிருந்தன.ஆனால், அந்தச் சவால்களுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் விமான வருகைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை இணைக்கும் வகையில் பல சர்வதேச விமான நிறுவனங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்தை நம்பிக்கை வைத்து தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி, ரஷ்யாவின் Red Wings, பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தானிலிருந்து SkyUp, டுபாயிலிருந்து Fly One, உஸ்பெகிஸ்தானிலிருந்து Centrum Air மற்றும் Uzbekistan Airways, பல்கேரியாவிலிருந்து Bulgaria Air ஆகிய நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் மத்தலத்திற்கு விமான சேவைகளை நடத்தியுள்ளன.மேலும், பெலாரஸின் மின்ஸ்க் நகரிலிருந்து Belavia விமான சேவை, 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது விமானப் பயணங்களை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மத்தல விமான நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களை எளிதில் சென்றடைய முடிவதால், இலங்கையின் சுற்றுலா துறையை ஊக்குவிப்பதில் இந்த விமான நிலையம் முக்கிய பங்கை வகிக்கிறது. அதே நேரத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிக நெரிசலுக்கு ஒரு திறம்படையான மாற்றாகவும், மூலோபாய ரீதியாகவும் மத்தல விமான நிலையம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒருகாலத்தில் பெரும் பொது நிதி செலவிடப்பட்டும் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையிலிருந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், 2025 ஆம் ஆண்டில் பெற்றுள்ள இந்த முன்னேற்றம், அதன் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.