தேசிய பாடசாலை ஆசிரியர் பிள்ளை ஒன்றியத்தின் போராட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட தேசிய பாடசாலை ஆசிரியர் பிள்ளை ஒன்றியம், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைதிப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சேவையாற்றிய கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் சலுகை, எந்தவித விளக்கமும் இன்றி 2025 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த விடயம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கோரியபோதும், இதுவரை தெளிவான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தமது கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமான உறுதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதைக் வலியுறுத்தி, தேசிய பாடசாலை ஆசிரியர் பிள்ளை ஒன்றியம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.குறிப்பிடத்தக்க வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தமது பிள்ளைகளுடனும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல தேசிய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.