மாறும் உலக அரசியல் சூழலில் ஸ்மார்ட் அரசியல் அவசியம்-ரணில்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) புதிய தலைமுறை அரசியலை நோக்கி நகரத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் அரசியலை அடிப்படையாகக் கொண்டும் தொழில்நுட்பத்தை மையமாக வைத்தும் ஒரு நவீன தலைமையைக் கட்டமைப்பதே கட்சியின் எதிர்கால இலக்கு என அவர் கூறினார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் SMART UNP எனப் பெயரிடப்பட்ட டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த இளைய தலைமுறையின் அரசியல் பங்கு குறித்து சிந்திக்க வேண்டிய காலம் இது என சுட்டிக்காட்டினார்.மேலும் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணியில் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தனது காலத்தில் மில்லினியர் தலைமுறையை உருவாக்க முயன்றதை நினைவுகூரினார். மேலும் தற்போதைய சூழலில் ஜென் Z(Gen Z) தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் தயார்பாடு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உலக அரசியல் சூழல் பெரிதும் மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இன்றைய உலகம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் செல்வாக்கும், அதற்கு சவால் விடும் சீனாவின் வளர்ச்சியும் இணைந்து உருவாகியுள்ள சூழலில் இயங்குகிறது என்றார். அதே நேரத்தில், அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் காலகட்டத்தையும் இலங்கை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய உலக மற்றும் பிராந்திய மாற்றங்களுக்கு முகம் கொடுக்க, தொழில்நுட்பத்தை தழுவிய ஸ்மார்ட் அரசியல் மற்றும் பல கட்சி ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை இதுவரை பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் முன்னேறி வந்துள்ளதாகக் கூறிய அவர், அந்த மரபை நிலைநிறுத்த அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.