அமைதியைத் தேடும் லிபியாவில் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை

முன்னாள் லிபிய தலைவர் முஅம்மர் கடாபியின் மகனும், சர்வதேச அளவில் அதிகம் அறியப்பட்ட அரசியல் முகமாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, லிபியாவில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.53 வயதான சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம் தொடர்பான தகவலை, அவரது வழக்கறிஞர் காலித் அல்-சைதி மற்றும் அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தனித்தனி சமூக ஊடக பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், கொலை தொடர்பான மேலதிக விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.அப்துல்லா ஒத்மானை மேற்கோள் காட்டி ஃபவாசெல் மீடியா வெளியிட்ட செய்தியின்படி, லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸிந்தான் நகரிலுள்ள அவரது இல்லத்தில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தி சைஃப் அல்-இஸ்லாம் கடாபியை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, திரிப்போலியை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசியல் அமைப்பான உயர் மாநில கவுன்சிலின் முன்னாள் தலைவர் காலித் அல்-மிஷ்ரி, அவசரமானதும் வெளிப்படையானதும் ஆன விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சைஃப் அல்-இஸ்லாம் கடாபி தற்போது எந்த அதிகாரப்பூர்வ அரசியல் பதவியையும் வகிக்கவில்லை. எனினும், 2000 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில், தனது தந்தையின் முக்கிய ஆலோசகராகவும், அரசியல் வாரிசாகவும் பார்க்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதுடன், லிபியாவில் அவரது பல தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்தது.அதே ஆண்டு, திரிப்போலி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர் நாட்டை விட்டு தப்ப முயன்ற சைஃப் அல்-இஸ்லாம், ஸிந்தான் நகரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட அவர், அதற்குப் பிறகு ஸிந்தானிலேயே வசித்து வந்தார்.1972 ஜூன் மாதம் திரிப்போலியில் பிறந்த சைஃப் அல்-இஸ்லாம், கடாபியின் இரண்டாவது மகன் ஆவார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி பயின்ற இவர், சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர். ஆரம்ப காலத்தில் சீர்திருத்தவாதியாக தன்னை முன்னிறுத்திய அவர், மனித உரிமைகள், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தார்.எனினும், 2011 கிளர்ச்சிக் காலத்தில் அவர் தனது தந்தையின் பக்கம் நின்று, கிளர்ச்சியாளர்களை கடுமையாக விமர்சித்தார். அரசாங்கம் கடைசி வரை போராடும் என எச்சரித்த அவர், நாட்டின் எதிர்காலம் குறித்து கடும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டிருந்தார்.அவர்மீது அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்ததாகவும், வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்பட்டு வந்தார்.2021 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது லிபியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2015 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனையை காரணமாக்கி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து எழுந்த சட்டப் போராட்டங்களும் ஆயுதக் குழுக்களின் தலையீடுகளும், லிபியாவின் தேர்தல் செயல்முறையே முற்றாக முடங்கக் காரணமாக அமைந்தன.2017 ஆம் ஆண்டு விடுதலையான பின்னர், உயிர் அபாய அச்சத்துடனேயே அவர் ஸிந்தான் நகரில் தனிமையான வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இறுதியில் அவர் அஞ்சியபடியே ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.முஅம்மர் கடாபி 2011 இல் எச்சரித்தது போலவே, லிபியா இன்னும் நிலையான அரசியல் தலைமையையும் நீடித்த அமைதியையும் அடைய முடியாத நிலையிலேயே இருப்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660