ரூ. 100 கோடி கோரி அனுப்பப்பட்ட Letter of Demand அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவுக்கு எதிராக ரூ. 1,000 மில்லியன் (ரூ. 100 கோடி) நஷ்டஈடு கோரி சட்ட ரீதியான அறிவித்தல் (Letter of Demand) அனுப்பப்பட்டுள்ளது.மேலும்
இந்த அறிவித்தல், அமைச்சரின் சட்டத்தரணி சம்பத் யலேவத்தினால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், அண்மையில் நிரோஷன் பாதுக்க நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸை தொடர்புபடுத்தி வெளியிட்ட கருத்துக்கள் அவதூறானவை மற்றும் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, கறுப்புப் பட்டியலில் உள்ள மருந்து நிறுவனமொன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான கடனட்டையை பயன்படுத்தி, அமைச்சர் இந்தியாவில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ததாக நிரோஷன் பாதுக்க குற்றச்சாட்டு முன்வைத்திருந்ததாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறும், இல்லையெனில் பதவி விலகத் தயாரா என அவர் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு பரப்பப்பட்டவை என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நீண்ட காலமாக ஊழலற்ற, கொள்கை சார்ந்த அரசியலில் ஈடுபட்டு வருபவர் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்றும் அந்த அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதிப்பதற்காகவே இவ்வாறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட நற்பெயர் சேதத்திற்காக ரூ. 1,000 மில்லியன் நஷ்டஈடு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.குறித்த சட்ட அறிவித்தல் பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் இத்தொகையை செலுத்தத் தவறினால், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவித்தலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.