மாறும் வானிலை இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை எச்சரிக்கை..
இன்றைய தினம் (02) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளது.மேலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசும் மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்
பொத்துவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. அதேபோல், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை நிலவக்கூடும்.
காற்றின் வேகம் பொதுவாக மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், களுத்துறையிலிருந்து கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.மேலும்
களுத்துறையிலிருந்து மன்னார் வரையிலானதும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலானதும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படலாம். நாட்டைச் சூழவுள்ள மற்ற கடற்பரப்புகள் மிதமான அலையுடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதோடு கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.