எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க முடியாத நிலை
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எரிபொருள் விலையில் சமீப காலத்தில் சிறிய அளவிலான குறைவு பதிவாகியிருந்தாலும், எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே பேருந்து கட்டண திருத்தம் அவசியமாகும் சூழ்நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது தற்போது கடுமையான சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நடைமுறையில் இருந்த தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2.5 முதல் 3 கிலோமீற்றர் வரை பேருந்துகள் இயங்கும் வகையில் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிகிறது என அவர் விளக்கினார்.மேலும்இந்த நிலைமை காரணமாக, பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 முதல் 6 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இலங்கையில் பெரும்பாலும் குறுகிய தூரப் பேருந்து சேவைகளே அதிகம் செயல்படுவதாகவும், நாட்டில் சுமார் 13,000 முதல் 14,000 வரையிலான பேருந்துகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் சுமார் 6,000 முதல் 7,000 பேருந்துகள் அதிகமாக இயங்கும் நிலை காணப்படுவதால், குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்தை நிர்வகிப்பது சாத்தியமற்ற நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய அரசாங்கம் பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். பொதுப் போக்குவரத்து சேவையை விரைவாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் கட்டண உயர்வுக்கான கோரிக்கையை முன்வைக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.இதுவரை பொறுமையாக காத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொதுப் போக்குவரத்து சேவை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பேருந்து சேவையை ஒழுங்குபடுத்துவது தங்களின் பொறுப்பு அல்ல என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.மேலும் பேருந்து கட்டணங்களை மீளாய்வு செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை 5 அல்லது 6 ரூபாயினால் உயர்த்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் கெமுனு விஜேரத்ன கூறினார்.