கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுப்பிய புதிய பரிந்துரை குறித்து தீவிர ஆய்வு
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை தொடர்பாக தற்போது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இந்தப் பதவிக்காக ஜனாதிபதி ஐந்தாவது முறையாக ஒரு நபரின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்துள்ளார். குறித்த பரிந்துரையை நேற்று கூடி இறுதியாக தீர்மானிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பரிந்துரைக்கப்பட்ட நபரைப் பற்றிய விவரங்களை ஆழமாக ஆய்வு செய்ய மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக சபை உறுப்பினர்கள் தெரிவித்ததை அடுத்து, இறுதி முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக அரசியலமைப்பு சபை இன்று கூடி கலந்துரையாடியது. ஜனாதிபதி புதிய பெயர் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். அந்தப் பரிந்துரையை முறையாக ஆய்வு செய்ய உறுப்பினர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது,எனக் கூறினார்.மேலும், இது தொடர்பான இறுதி தீர்மானம் பாராளுமன்றம் கூடும் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதியன்று எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.