வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், இம்முறை இந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிக்கும் நடைமுறை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் இந்த திருத்தச் செயல்முறை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலை காட்சிப்படுத்தி, அதற்கான உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த அறிவித்தல் வெளியானதிலிருந்து 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டிற்கான திருத்தத்தின் போது தேவையான தகைமைகளை பூர்த்தி செய்திருந்தும் ER படிவத்தின் மூலம் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்கள், இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதி அற்ற நபரின் பெயர் இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டால், அதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இதே காலப்பகுதியில் வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தத்தமது பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.