ஹட்டன் நகைக் கடையில் திருட்டு,ரூ.2.89 இலட்சம் தங்க நெக்லஸ் அபகரித்த நபர் கைது
ஹட்டன் நகரிலுள்ள ஒரு நகைக் கடையிலிருந்து ரூ. 2,89,000 மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிச் சென்ற சந்தேகநபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹட்டன் நீதிவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இம்மாதம் 27 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இந் நபர்
பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் மேற்பகுதியில் வசிக்கும், 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் வீரய்யா இராதாகிருஷ்ணன் என்பவர் ஆவார். சம்பவ தினத்தில், தங்க நெக்லஸை வாங்குவதாகக் கூறிய சந்தேக நபர், அதன் மதிப்பை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் திரும்பி வரும் வரை நெக்லஸிற்கான பில்லைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நெக்லஸை ஆய்வு செய்வதாக கூறி திடீரென அதனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்
ஹட்டன் தலைமையக தலைமை பொலிஸ் அதிகாரிகளின் விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், தலைமையக தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.மேலும், சந்தேகநபர் தங்க நெக்லஸுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை ரயில் பாதையோரமாக நடந்து சென்று, பின்னர் நாவலப்பிட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் அந்த நகையை ரூ.1,69,000க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையில் ஒரு பகுதியை கடனாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செயப்படும் போது சந்தேக நபரிடம் 10,000.00 ரூபாய் மட்டுமே காணப்பட்டது என ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.