மத்திய அரசின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு
மத்திய அரசு நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து,இமாச்சல கிசான் சபா மற்றும் இமாச்சல செப் உத்பாதக் சங் ஆகியவற்றின் கீழ் திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், சிம்லா செயலகத்தை நோக்கி நேற்று (19) பேரணியாகச் சென்றனர்.
இவ் போராட்டத்தின் முக்கிய அம்சங்களாவனா:
இறக்குமதி வரி குறைப்பு-ஆப்பிள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், இந்திய சந்தைகளில் மலிவான வெளிநாட்டு ஆப்பிள்கள் குவியும் என்றும், இதனால் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 15 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு-இந்தியா,நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) கடுமையாக எதிர்ப்பதோடு, ஆப்பிள் மற்றும் இதர பழங்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நில உரிமைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், வன உரிமைச் சட்ட மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP) லிட்டருக்கு ரூ. 60 வழங்க வேண்டும் மற்றும் MNREGA வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் பேரிடர் மற்றும் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை மற்றும் நீர்மின் திட்டங்களை முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.